04/06/2026
தென்கரை கோட்டை - தமிழ்நாட்டில் மிச்சமிருக்கும் தரை கோட்டைகளில் ஒன்று . தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் தென்கரைக்கோட்டை அமைந்துள்ளது.
ஜலகண்டேஸ்வரர் நதியின் தென்கரையில் கோட்டை அமைந்துள்ளதால் இதற்கு தென்கரை கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இது கிபி 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் சுமார் 40 ஏக்கரில் கோட்டை கட்டபட்டதாக நம்பபடுகிறது. 1652-ம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் வசமும் , 1968-ல் ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டும் திப்பு, மன்ரோ காலத்தில் முக்கிய நகரமாகவும் திகழ்ந்தது.
கோட்டை மண்ணால் அமைக்கப்பட்ட பிரமாண்ட மதில் சுவரை அரணாகக் கொண்டது. கோட்டையை சுற்றி சுமார் 15 அடி ஆழ அகழி உள்ளது. கோட்டையின் உள்ளே மிகப்பெரிய குளம், ஓய்வறை, யானை, குதிரைகளின் லாயங்கள் உள்ளன. தற்போது இந்த லாயங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. தர்பார் அரண்மனை, 50 அடி உயரம், 75 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது.
குறுநில மன்னர் சீலப்ப நாயக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஜலகண் டேஸ்வரர் ஆற்றின் அருகே ஓய்வு எடுத்துள்ளார். அப்போது சீலப்ப நாயக்கரின் கனவில் திருமண கோலத்தில் ராமர் சீதையுடன் காட்சி அளித்ததால், அவர் தென்கரைக்கோட்டை பகுதியில் கல்யாண ராமர் நிறுவியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
கோட்டை வளாகத்தில் கல்யாண ராமர் கோயிலும் அதன் வடப்புறத்தில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம், அம்மன் சன்னதி, ஆஞ்சநேயர், முருகர் சன்னதிகள் உள்ளன. கல்யாண ராமர் கோவில் முன் மண்டப சிற்பங்கள், சடைப்பெண்கள் வேலைப்பாடு மிக்கவை.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் தகடூர் யாத்திரையில் இவ்விடத்தை காண - https://forms.gle/PB1cVkQM3ew3Dg8r7